Showing posts with label sripirya. Show all posts
Showing posts with label sripirya. Show all posts

Tuesday, 29 November 2016

"நாம என்ன நாட்டாமையா?" -டிவி பஞ்சாயத்துகளுக்கு நடிகை ஸ்ரீப்ரியா கண்டிப்பு!

டிவியில் நடக்கும் 'குடும்பப் பஞ்சாயத்து' ஷோக்கள் குறித்து நடிகையும் இயக்குநருமான ஸ்ரீப்ரியாவின் கருத்துகள் இணையத்தை பரபரப்பாக்கியுள்ளது.  சன் டிவியில் குஷ்பு நடத்தும் 'நிஜங்கள்' என்கிற டாக் ஷோவில் கலந்து கொண்ட கணவன் - மனைவி இருவரும் திடீரென்று ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ள முயற்சி செய்தனர். இதைத் தடுக்கப் போன குஷ்பு, நடந்த களோபரத்தில் அந்த ஆணின் சட்டையை கொத்தாக பிடித்து விலக்கி விட்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளன.

இந்நிலையில் இது போன்ற ஷோக்கள் தொடர்பாக  நடிகை ஸ்ரீப்ரியா தனது முகநூலில் இன்று ஒரு கருத்தை எழுதினார் அது இன்னும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த பேஸ்புக் ஸ்டேட்டஸில் " கணவன் மனைவிக்கும் இடையில் பிரச்னை என்றால் அதை தீர்த்து வைக்க சட்டம் இருக்கிறது. கோர்ட் இருக்கிறது. அதில் கிரிமினல் குற்றங்கள் நடந்தால் தண்டிக்க பலவகையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதையெல்லாம் விட்டு விட்டு கலைஞர்கள் தொலைக்காட்சியில் பஞ்சாயத்து செய்வதை பார்க்க சகிக்கவில்லை. நாம் இது போன்றவற்றை விடுத்து நமக்குத் தெரிந்த கலை தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தலாம்" என்று எழுதியிருந்தார். இதை அவரின் நட்புப்பட்டியலில் இருக்கும் நபர்களுக்கு மட்டும் தெரியும் வண்ணம் எழுதிய ஸ்ரீப்ரியா பின்னர் அதன் திரைச்சொட்டை (ஸ்கீரின் ஷாட்) ட்விட்டரில் பகிர்ந்தார்.  

இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் அக்கௌண்டிலும் இதே பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீப்ரியா "அப்படி இது போன்ற ஆதரவற்ற மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருக்குமானால் அதை கேமரா இல்லாமல் செய்யலாமே. அவர்களின் பிரச்னை தீர சரியான ஆலோசகரிடமோ அல்லது குடும்பநல ஆலோசகரிடமோ அனுப்பலாமே" என்றும் ட்விட் எழுதினார். 
இதற்கும் பலத்த ஆதரவு இருந்தது. சிலர் எதிர் கருத்தும் எழுதினார்கள். ஆனால் அவர்களுக்கு பொறுமையாய் பதிலும் சொல்லிக்கொண்டுதான் இருந்தார். இது குறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்ட போது
"எப்ப டீவியை போட்டாலும் எதோ குடும்பத்தின் பிரச்னையும் கண்ணீரும் அடிதடியும்தான் டிவியில் ஓடிக்கொண்டிருக்கிறது. நான் தமிழ் சேனல்களை மட்டும் சொல்ல வில்லை. தென்னிந்திய சேனல்கள் அனைத்திலும் இதுதான் இருக்கிறது. இன்னும் சொல்வதானால் இந்த நிகழ்ச்சியை நடத்தும் அனைவரும் எனக்கு மிக நெருக்கம். இருந்தாலும் என் கருத்தினையும் என் உணர்வினையும் பகிர்ந்துதானே ஆக வேண்டும். திரைத்துறையில் அடிமட்ட தொழிலாளிகளான புரொடக்‌ஷன் உதவியாளரில் தொடங்கி தயாரிப்பாளர், கலைஞர்கள், இயக்குநர்கள் வரை மிகமிக உணர்வு பூர்வமானவர்கள். கண்ணீர் சுரப்பி என்பது நடிகர்களுக்கு மட்டுமல்ல ஆசையுடன் திரைத்துறைக்குள் வந்த அனைவருக்கும் கொஞ்சம் அதிகமாகவே வேலை செய்யும். நிகழ்ச்சியை நடத்தும் முன்னணி நடிகைகளுக்கு அங்கு பங்கேற்கும் நபர்களின் பின்னணியோ, பிரச்னைகளின் ஆழமோ 100 சதவிகிதம் முழுதாக தெரியப்போவதில்லை.
அப்படியான சூழலில் அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டுமானால் அதை கேமரா இல்லாமலே செய்யலாமே.இன்றைக்கும் சினிமாவில் எவ்வளவோ பேர் சத்தமில்லாமல் உதவி வருகின்றனர். அதே போல தனிப்பட்ட மனிதர்களின் துயரங்களையோ, கஷ்டங்களையோ வெளிப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் இது போன்ற குடும்பப் பிரச்னைகளில் ஈடுபடுவதை என்னைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நான் 8-வது வரைதான் படித்துள்ளேன்.
ஒருவர் அவரின் வாழ்க்கை பிரச்னை குறித்து என்னிடம் யோசனை கேட்டாலோ அல்லது அந்த பிரச்னையை சொன்னாலோ என் அனுபவத்தின் அடிப்படையில்தான் என்னால் யோசனை சொல்லமுடியும். அதற்கு என படித்த சட்ட அறிஞர்களோ, குடும்ப நல ஆலோசகர்ளோதான் சரியான ஆலோசனையோ, வழிகாட்டுதலோ செய்ய முடியும். யாரையும் புண்படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. தெலுங்கு தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நிகழ்ச்சி நடத்தும் அனைவரும் என் நெருங்கிய தோழிகள்தான். இருந்தாலும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை"என்று தெரிவித்தார். 
Read more ...
Designed By Santhosh.V