Thursday, 2 May 2013

எதிர்நீச்சல் – திரை விமர்சனம்


ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் நெருடலைக் களமாக்கி, வித்தியாசமான களத்துடன் வெளிவந்திருக்கிறது ‘எதிர் நீச்சல்’. சிவகார்த்திகேயன், ‘கொலவெறி’ அனிருத் இசை, நடிகர் தனுஷின் தயாரிப்பு, என எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் கிளப்பிய ‘எதிர்நீச்சல்’ எப்படி…?
குலதெய்வத்தின் பெயரோ, பாட்டன் முப்பாட்டனுடைய பெயரோ… ஒருவருக்கு வைக்கும்போது அவருடைய மனநிலை எப்படி இருக்கும்? என்ற கருத்தோடு, ஒருவனது உழைப்பிலும் முயற்சியிலும் மட்டுமே வெற்றி புதைந்திருக்கிறதே தவிர, அவனது பெயரில் அல்ல… என்ற சாதாரண வரியினை முழு படமாக, திருப்தியாகக் கொடுத்ததற்காக மோஸ்ட் வெல்கம்… அறிமுக இயக்குனர் துரை செந்தில்குமார். பல வருடங்களாக புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்த சிவகார்த்திகேயனின் அம்மா, தனக்கு சுகப்பிரசவம் நடந்தால் ‘உனது பெயரையே சூட்டுகிறேன்’ என குலதேவத்திடம் வேண்டுகிறாள். அதன்படியே நடந்து, குழந்தைக்கும் ‘குஞ்சிதபாதசாமி’ என்ற பெயர் சூட்டப்பட, அது நாயகன் சிவகார்த்திகேயனுக்கு பள்ளி, கல்லூரி, நண்பர்கள் என எல்லா இடங்களிலும் மன உளைச்சலுக்கு ஆளாகவேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, தனது பெயரை மாற்றிவிடலாம் என முடிவெடுக்கும்போது குடும்பத்தில் சில பிரச்சனைகள் எழவே மாற்றாமல் விட்டுவிடுகிறார். இப்படியே நகர்ந்துகொண்டிருக்கும்போது கடைசியில் ‘குஞ்சிதபாதம்’ என்கிற பெயர் தன் காதலுக்கே பிரச்சனையாக வரவே, ஒரு சுபயோக சுபதினத்தில் தனது பெயரை ஹரிஷ் என மாற்றிக்கொள்கிறார். கூடவே, குடியிருக்கும் வீடும், அவனது ஏரியாவும் மாறுகிறது. அப்போது நாயகனுக்கு அறிமுகமாகிறாள், ப்ரியா ஆனந்த். பள்ளி ஆசிரியையான அவள்மீது நட்பாகி பின் காதல் கொள்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கும், ‘குஞ்சிதபாதம்’ என்ற பெயரை மாற்றிய விஷயம் தெரியவரவே, அதற்கு நாயகன் என்ன முடிவு எடுக்கிறான் என்பதே ‘எதிர்நீச்சல்’ படத்தின் கதை.
குஞ்ச்சிதபாதமாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய முழு திறமையை வெளிப்படுத்தும்படியான அற்புதமான கேரக்டர். பெயரால் அவர் படும் அவஸ்தைகள் அவ்வளவு அழகு…! காதலுக்காக சுத்துவது, காதலை வெளிப்படுத்துவது, காதலை வளர்ப்பது , பின் காதலை காப்பாற்றிக்கொள்ள போராடுவது என படம் முழுவதும் ஆக்கிரமிக்கிறார். நாயகி ப்ரியா ஆனந்தின் நடிப்பும் சிவாவுக்கு இணையாக பின்னிப்பெடலேடுக்கிறது. தவிர, இன்னொரு நாயகியாக நந்திதா கச்சிதம்! மற்றும் பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஜெயப்பிரகாஷ், மனோபாலா, மதன்பாபு என அனைவரும் நிறைவு. இடைவேளை வரை மெல்ல ஊர்ந்துவரும் கதை, இடைவேளைக்குப் பிறகு பறக்கிறது… மராத்தான் போட்டியில் கலந்துகொள்ளும் சிவகார்த்திகேயன், அவருக்கு கோச்சாக வரும் நந்திதா, இருவருக்கிடையேயான அழகான பிளாஸ்பேக்… என ஒவ்வொரு காட்சியும் கவிதை ரகம்!
அனிருத் இசையில் பாடலகள் அனைத்தும் ஏற்கனவே ரசிகர்களுக்கு ஹிட் ரிப்பீட் மியூசிக்… பின்னணி இசையும் ஒகே. ஒரு மனிதனுக்குள் மாறி மாறி தோன்றும் இரு உணர்வுகளை அழகாகக் காட்டியிருக்கிறது வேல்ராஜின் கேமரா. இதுமட்டுமல்லாமல், படத்தின் வேகத்தை அதிவேகமாக்க, தனுஷ் ஆடிப்பாடும் ஒரு பார் சாங்… என படம் முழுக்க கொண்டாட்டம்தான்!
படத்தின் முதல் பாதியில் இருக்கும் வேகமும், காமெடியும் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். இடைவேளைக்கு பிறகு வரும் காயத்திரியின் பிளாஷ்பேக் ரொம்ப நீலம். அதனை தவிர்த்து இருந்தால் இப்படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நமக்கு பெற்றோர் வைக்கும் பெயர், நமது தலைமுறையின் தொடர்ச்சி… என்ற நல்ல கருத்தோடு முடிகிறது படம்.

மொத்தத்தில்… இந்த ‘எதிர்நீச்சல்’ மனதுக்கு இனிமையாய்…!                      

Rating – 3/5



Source:cine writers



No comments:

Post a Comment

Designed By Santhosh.V