‘அட்டகத்தி’, ‘பீட்சா’ வெற்றிப்படங்களுக்குப் பிறகு ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ சி.வி.குமார் தயாரிப்பில் வெளிவரும் படம், சமீபகாலமாக திறமையான நடிப்பால் ஹிட் லிஸ்ட்டில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, குறும்பட இயக்குநராகக் கலக்கிய நலனின் இயக்கம், சந்தோஷ் நாராயணின் இசை… என இளமையான கூட்டணியின் உழைப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சூது கவ்வும்’
எந்த ரிஸ்க்கும் இல்லாமல், சாதரணமாக ஆட்களைக் கடத்தி பணம் சம்பாதிக்கும் நாயகன் விஜய் சேதுபதி, இன்னொருபுறம் சில காரணங்களால் வேலையை இழந்த மூன்று நண்பர்கள். ஒயின்ஷாப்பில் நடக்கும் ஒரு சிறு சண்டையில் அனைவரும் இணைகிறார்கள். பிறகென்ன..? கூட்டமாக சேர்ந்து கடத்தலைத் தொடர்கின்றனர். சிறு சிறு கடத்தல்களுக்குப் பிறகு, தொடர்ச்சியாய் இவர்களுக்கு வேலை வர, அதன்பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுமே… ‘சூது கவ்வும்’ படத்தின் கதைக்களம். என்னடா இது…? ரொம்பப் பழைய கதையாக இருக்கே…! என முழி பிதுங்கி நிற்காதீர்கள். கதை பழசாக இருந்தாலும், அதை திரைக்கதையாக மாற்றியிருக்கும் விதத்திலும், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பத்திரமாய்ச் செதுக்கியுள்ள விதத்திலும், சீரியஸான கதையைக் காமெடியாகச் சொன்ன விதத்திலும் அதிகவனம் பெறுகிறார், அறிமுக இயக்குனர் நலன் குமாரசாமி. ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் கலக்கிய குறும்பட இயக்குனர்.
சற்றே மனநிலை குழப்பத்துடன், அதேசமயம் அசட்டுத்தனமும் நேர்மையும் கலந்த கடத்தல்காரன் தாஸ் கேரக்டரில் விஜய் சேதுபதி…! இந்த வருடத்தின் மாஸ் நாயகன். ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பும், மேனரிசமும் அப்ளாஸ் அள்ளுகிறது. தவிர, விஜய் சேதுபதியின் கூட்டாளிகளாக வரும் சிம்ஹா, ரமேஷ், அசோக் மற்றும் கருணா. இவர்களது ஒவ்வொரு காட்சியையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்தளவுக்கு படத்தின் விறுவிறுப்புக்கும், கலகலப்புக்கும் கைகொடுத்திருக்கிரார்கள். முக்கியமாக சிம்ஹாவின் நடிப்பு ஆஹா… ரகம்! நாயகியே தேவைப்படாத கதைக்கு, கற்பனை வடிவில் நாயகி, சஞ்சிதா ஷெட்டியைத் திணித்திருக்கிறார்கள். கொடுத்த கேரக்டரை திருப்தியாக முடித்திக் கொடுத்திருக்கும் அஷ்ரிதா, தமிழ்சினிமா இதுவரை கண்டிராத பபுதுமையான நாயகி. இதுதவிர, படத்தில் இடம்பெற்றுள்ள டாக்டர் கேரக்டர், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரது கேரக்டர்களும் மனதுக்கு நிறைவு.
படத்துக்கு முக்கியமான பங்கு வகிப்பது டைமிங் வசனங்கள்… எளிமையாகவும், அதேசமயம் புதுமையாகவும் இருப்பதோடு மனதோடு பதிந்துவிடுகிறது. ‘பிளானோட வந்தவனெல்லாம் கஷ்டப்படுறான். பிளான் இல்லாம வந்தவன்தான் ஜெயிக்கிறான்’ போன்ற வசனங்கள் நச்….! ஒளிப்பதிவும், இசையும் சூப்பர் ரகம். கதையோடு நகரும் சிறுசிறு பாடல்களும், புதுமையான பின்னணி இசையும் படத்தின் விறுவிறுப்புக்கு பக்கா துடுப்புகள். கூடவே, கானா பாலாவின் கலக்கலான பாடல் எல்லாமே படத்துக்கு மோஸ்ட் வான்டட்…! அப்படிஎன்றால், படத்தில் மைனஸ் பாயிண்ட்டே இல்லையா? என்று நினைத்துவிடவேண்டாம்…! ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள், சில முரணான காட்சிகள் இதிலும் தொடர்ந்தாலும், படத்தின் விருவிருப்பில் அவை தடம் தெரியாமல் மறைந்து போகின்றன. எனவே, லாஜிக் இல்லாமல் முழுக்க முழுக்க பொழுது போக்கிற்காக எடுக்கப்பட்ட இந்தப்படம், அதற்கான இலக்கை கச்சிதமாக எட்டியிருக்கிறது…!
மொத்தத்தில்… சூது கவ்வும் – உங்கள் மனதையும் கவ்வும்…!
Rating – 3.25/5
Source :cine writers
No comments:
Post a Comment